ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது கல்லூரிப் படிப்பும் முடிந்தது. அவரவர்களும் அவர்கள் படித்த படிப்பின் துணைகொண்டு வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், மேலாளர் என வேறுவேறு துறைகளில் பயணம் செய்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விருந்தில் உணவருந்திக் கொண்டே பேச ஆரம்பித்தனர். இவர்கள் நால்வரும் வேறுவேறு திசைகளில், வெவ்வேறு துறைகளில் பிரகாசமாக இருக்கின்றனர். அனைவரும் வசிக்கும் இடங்கள் வேறு வேறாகவும், இவர்கள் அனைவரின் தாயார் வசிக்கும் இடம் வேறாகவும் இருப்பதால் எப்போதாவது ஒரு சந்திப்பு நிகழ்ந்து சகோதரர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பேசி மகிழும் சந்தர்ப்பம் நிகழும்.
முதல் சகோதரர் சொன்னார் - “நம் அம்மாவுக்காக நான் ஒரு பெரிய வீடு - எனது கனவு மாளிகையைக் கட்டியிருக்கிறேன்”.இரண்டாமாவர் சொன்னார் - “அம்மாவுக்காக பெரும் செலவில் ஒரு திரையரங்கத்தை வீட்டினுள் நிர்மாணித்திருக்கிறேன். Dolby ஒலிபெருக்கியம்சங்கள் கொண்டது அது.”மூன்றாம் நபர் சொன்னார் - “என்னுடைய பங்காக ஒரு Mercedes காரை அம்மாவுக்குக் கொடுத்திருக்கிறேன்”.(நான்காவது சகோதரர் இந்த விருந்தில் கலந்துகொள்வதற்குச் சற்றுத் தாமதமாகிவிட்டது. தற்போதுதான் உள்ளே நுழைந்தார். பிறர் கூறிய வாக்கியங்கள் அவருக்கு மீண்டும் சொல்லப்பட்டன. பின் உரையாடலைத் தொடர்ந்தார்)நான்காம் நபர் சொன்னார்:
“உங்கள் எல்லோருக்கும் தெரியும். நம் அம்மாவுக்கு கீதை படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். ஆனால் அவளுக்கு இப்போது வயதாகிவிட்டதால் கண்பார்வை பிரச்சினை உள்ளது"."அதனால் அவளால் கீதை படிக்க முடிவதில்லை. நான் ஒரு சாமியாரை சந்தித்தேன். அவர் ஒரு கிளியைப் பற்றிச் சொன்னார். அந்தக் கிளிக்குக் கொடுத்த முறையான 12 ஆண்டுகாலப் பயிற்சியின் விளைவால் முழு கீதையையும் படிக்கும் இயல்பைப் பெற்றிருக்கிறது. அந்தக் கிளியை அம்மாவுக்குப் பரிசாக வாங்க முடிவு செய்தேன்."
" ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என 20 ஆண்டுகளுக்கான பணத்தை அவருடைய மடத்திற்கு முன் தேதியிட்ட காசோலையாகக் கொடுத்துவிட்டு வந்தேன். இந்தத் தொகையை நன்கொடையாகக் கொடுத்ததால் அவர்கள் அந்தக் கிளியை எனக்குக் கொடுத்தார்கள். முழு கீதையையும் சப்தமாகப் படிக்கக் கூடிய அந்தக் கிளியை அம்மாவுக்குக் கொடுத்துவிட்டு இப்போதுதான் வந்தேன். அதனாலேயே இங்கே வரத் தாமதமாகிவிட்டது”.
இதைக் கேட்ட மற்ற மூவர் மனதிலும் நல்ல அபிப்பிராயம் உண்டானது.அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு அவர்களது அம்மா ஒரு நன்றியறிவிப்புக் கடிதத்தை அனுப்பி இருந்தாள்.
(1)மகனே கிருஷ்ணா நீ எனக்குக் கொடுத்த வீடு மிகப் பெரியது (dream house). ஆனாலும் நான் அதில் ஒரே ஒரு அறையே போதுமானதாக உணர்ந்து ஒரு அறையில் வசிக்கிறேன். ஆனால் மீதியுள்ள எல்லா அறைகளையும் நான் சுத்தப் படுத்தியே தீரவேண்டியுள்ளது. எனினும் நன்றி.
(2) மகனே சுந்தர் நீ எனக்குக் கொடுத்த Mercedes காரை நான் இன்னும் பயன்படுத்தவில்லை. எனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் என்னால் அதில் பயணம் செய்யமுடியவில்லை. எனக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வீட்டுக்கே வந்து கொடுக்கிறார்கள். ஆதலால் உனது கார் நீ நிறுத்திய அதே இடத்திலேயே நிற்கிறது. இருப்பினும் நன்றி.
(3)மகனே கணேஷா நீ எனக்கு ஒரு மிகப் பெரும் செலவிலால் ஆன ஒரு Dolby திரையரங்கத்தையே வீட்டினுள் நிர்மாணித்தாய். அதில் நான் மட்டும் தனியே அமர்ந்து படம் பார்க்கப் பிடிக்கவில்லை. எனது தோழியர் அனைவரும் இறந்துவிட்டனர். எனக்கு இப்போது காதும் கேட்கவில்லை. கண்ணும் தெரியவில்லை. அதனால் அந்த திரையரங்கத்தை நான் பயன்படுத்தவேயில்லை. இருப்பினும் நன்றி.
(4)மகனே ஆனந்த், நீ கொடுத்த பரிசுதான் எனக்கு மிக விருப்பமான ஒன்றாக இருந்தது. உனது அறிவை மெச்சுகிறேன். நான்கு சகோதரர்களில் இருந்து வந்த பரிசுகளில் நீ கொடுத்ததுதான் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நீ கொடுத்த கோழியின் இறைச்சி மிகவும் ருசியானதாகவும், சத்தானதாகவும் இருந்தது. மிக்க நன்றி.
நீதி :
உங்கள் கவுரவத்தைக் காட்டுவதற்காக பெரும் செலவு செய்து பரிசு கொடுத்திடலாம். ஆனால் அதை வாங்குபவருக்கு அந்தப் பரிசால் நன்மையா என யோசித்துவிட்டுக் கொடுக்கவும்.கண் தெரியாத, காது கேட்காத ஒரு தாயிடம் கீதையைப் படித்துக்காட்டும் விலைமதிப்பற்ற கிளியைக் கொடுத்தால் அவள் அதை கோழியென்று நினைத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு கறி நன்றாக சுவையாக இருந்ததெனக் கடிதம் எழுதினாள்.அவளுக்குத் தேவை சுவையான கோழி வறுவல் மட்டுமே. அவளிடம் இப்படி தேவையில்லாத பெரும் செலவுள்ள பொருட்களைக் கொடுத்து என்ன பயன்.
கிளியைக் கோழியென்று நினைத்தது அவளது மூடத்தனமா? கொடுத்தவரின் அறியாமையா?
No comments:
Post a Comment